Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரூர் சந்தை தோப்பு பகுதியில் குடிநீர் சப்ளை சீர்செய்யக்கோரி பெண்கள் தர்ணா

அரூர், நவ.4: அரூர் அருகே கே.வேட்டரப்பட்டி ஊராட்சி ஈச்சம்பாடி சந்தை தோப்பு பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வருவாய்த்துறை மூலம் நிலம் வழங்கப்பட்டு, வீடு கட்டி அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, அடிப்படை வசதியான குடிநீர் கூட பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதனால், குடிநீருக்காக தேசிய நெடுஞ்சாலையை கடந்து, எதிர்ப்புற குடியிருப்புக்கு சென்று மக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

சாலையை கடக்கும்போது சிலர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். மழை காலத்தில் மழைநீரை சேகரித்து வடிகட்டி குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலி குடங்களுடன் திரண்டு சென்று அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ஊராட்சி செயலாளர் சிலம்பரசன், என்னிடம் தெரிவிக்காமல் எப்படி இங்கு வரலாம் எனக்கூறி மிரட்டும் வகையில் பேசியுள்ளார். தகவலறிந்து வந்த விவசாய தொழிற்சங்கத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டனர். அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.