தர்மபுரி, நவ.3: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், நிலப்பிரச்னை தொடர்பாக ஒருவர், உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கோரிக்கை மனு கொடுக்க மூதாட்டி, அவரது மகன் மற்றும் உறவினர் வந்தனர். அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, மூதாட்டியின் மகன் கையில் ஒரு கேனில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென தனது உடலில் ஊற்றினார். உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அவரது உடலில் தண்ணீர் ஊற்றி, மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் தர்மபுரி செட்டிக்கரை பள்ளக்கொல்லையை சேர்ந்த சரோஜா (63), அவரது மகன் திருப்பதி (35), சரோஜாவின் தங்கை மகன் பிரபு (46) என தெரியவந்தது. இதில் திருப்பதி தீக்குளிக்க முயன்றுள்ளார்.
போலீசாரின் விசாரணையில், தங்களுக்குச் சொந்தமான நிலம் மற்றும் வீடு தொடர்பான பிரச்னையில், பல ஆண்டுகளாகியும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. தங்களது சொத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி, பலமுறை மனுக்கள் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. சொத்தை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து, மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


