மாவட்டத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை குறைவால்; பயிர் சாகுபடி பணிகள் பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
தர்மபுரி, நவ.3: தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் 403.10 மி.மீ மழைக்கு பதிலாக 254.05 மில்லி மீட்டர் மட்டுமே, அதாவது சராசரி மழையளவில் 65 சதவீதம் மட்டுமே பெய்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வானம் பார்த்த பூமியான தர்மபுரி மாவட்டத்தில், மானாவாரி பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 942 மில்லி மீட்டர் ஆகும். இதுவரை 557.88 மி.மீ மழை பெய்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், கோடைகாலத்தில் 189.60 மில்லி மீட்டர் மழையும், தென்மேற்கு பருவமழை காலத்தில் 403.10 மில்லி மீட்டர் மழையும், வடகிழக்கு பருவமழை காலத்தில் 344.40 மில்லி மீட்டர் மழையும் சராசரியாக பெய்வது வழக்கம். ஆனால், நடப்பாண்டு கோடை காலத்தில் 164 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதேநேரத்தில், கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை, தென்மேற்கு பருவமழை 254.05 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை குறைந்ததால், சாகுபடி பரப்பு குறைந்தது.
இதனால், தென்மேற்கு பருவமழையை நம்பி நடைபெறும் மானாவாரி பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சராசரி மழையளவில் 65 சதவீதம் மட்டுமே மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 18ம் தேதி தொடங்கியது. 344.40 மில்லி மீட்டருக்கு இதுவரை 172.25 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட விவசாயிகள் கூறுகையில், `தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால், தொப்பையாறு, சின்னாறு, வாணியாறு, கேசர்குளி அணை, நாகாவதி அணை, தும்பலஅள்ளி அணை உள்பட மாவட்டத்தில் உள்ள 8 அணைகளிலும் நீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது. பருவமழை குறைந்ததால், விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய தீர்வு காண, தர்மபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். வடகிழக்கு பருவமழையாவது நன்றாக பெய்யும் என எதிர்பார்க்கிறோம்,’ என்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், `பயிர் சாகுபடிக்கு பருவமழையை நம்பியுள்ள தர்மபுரி மாவட்டத்தில், மானாவாரி பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. மழை பெய்தால் மட்டுமே விவசாய பணிகள் நடக்கும். இல்லையென்றால் தொய்வு ஏற்பட்டு விடும். நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை வெகுவாக குறைந்துள்ளது. பயிர் சாகுபடி பணிகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை, வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 344.40 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். இதுவரை 172.25 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், விவசாய பணிகள் நடந்து வருகிறது,’ என்றனர்.


