தர்மபுரி, ஆக.3: தர்மபுரி மாவட்டத்தில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட 4 லட்சத்து 74 ஆயிரத்து 621 பேருக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றங்கள் காரணமாக சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய தொற்றா நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களை கண்டறிந்து, மருத்துவ சிகிச்சைகள் அளிக்க மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதில் பாதிப்பு கண்டறியப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் பணியாளர்கள், வீடுகளுக்கு நேரில் சென்று மருந்துகள் வழங்குகிறார்கள். 45 வயதிற்கு குறைவானவர்களுக்கு அருகே உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக மருந்துகள் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், `தொற்றா நோய்கள் எனப்படும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் டாக்டர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற வேண்டும். மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும். இவர்களுக்கு மக்களத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தற்போது 17 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் மருத்துவ பரிசோதனை மூலமாக உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு 2 லட்சத்து 58 ஆயிரத்து 861 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் சர்க்கரை நோய் பாதிப்பு 1 லட்சத்து 17 ஆயிரத்து 59 பேருக்கும், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள 98 ஆயிரத்து 701 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட 4 லட்சத்து 74 ஆயிரத்து 621 பேர் தற்போது தொடர் மருத்துவ சிகிச்சை பெறுகிறார்கள்,’ என்றனர்.


