தர்மபுரி, ஆக.3: தர்மபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில், கடந்த 6 மாதத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 2.70 லட்சம் கிலோ பட்டுக்கூடுகள் கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்துள்ளனர். தமிழகத்தில் அதிக பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடி, தர்மபுரி ஆகும். இந்த அரசு பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ஆயிரக்கணக்கான கிலோ வெண்பட்டுக்கூடுகள் கொண்டுவரப்பட்டு தினசரி ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. பட்டு வளர்ச்சித் துறை மூலம் செயல்படும் இந்த அங்காடியில், தினமும் வெண்பட்டுக்கூடுகள் ஏலம் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தரமான பட்டுக் கூடுகள் விற்பனை செய்யப்படுவதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் வருகின்றனர். இங்கு ஒரு ஆண்டில் சராசரியாக 8 ஆயிரம் விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வருகின்றனர். ஒரு ஆண்டில் ரூ.35 கோடி மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், பட்டுக்கூடு வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தர்மபுரி-பென்னாகரம் சாலையில் சோகத்தூர் அருகே ரூ.19.20 கோடி மதிப்பில், நவீன வசதிகளுடன் பிரமாண்டமாக ஒருங்கிணைந்த புதிய அரசு பட்டுக்கூடு ஏல அங்காடி வளாகம் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையை எட்டி உள்ளன. விரைவில் முதல்வர் இந்த கட்டிடத்தை திறந்து வைப்பார்கள் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `தர்மபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில், தரமான விலையில், இடதரர்கள் இன்றி பட்டுக்கூடு ஏலத்தில் விற்பனை செய்கிறோம். பணம் வங்கி கணக்கில் வரவு வைத்து விடுகிறார்கள். இதனால், அமைதியான நிலையில் பட்டுக்கூடு விற்பனை நடக்கிறது. புதியதாக பட்டப்பட்டுள்ள தர்மபுரி ஒருங்கிணைந்த புதிய அரசு பட்டுக்கூடு ஏல அங்காடி வளாகத்தை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்,’ என்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் பட்டுக்கூடு உற்பத்தி மற்றும் விற்பனையில், தர்மபுரி மாவட்டம் முன்னிலை வகிக்கிறது.
குறிப்பாக, கடந்த 6 மாதங்களில் தர்மபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 2 லட்சத்து 70 ஆயிரத்து 917 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளன. ரூ.18 கோடியே 67 லட்சம் மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் 4,100 விவசாயிகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும் பயன் அடைந்துள்ளனர். தர்மபுரிக்கு பட்டுக்கூடு வரத்து அதிகரித்துள்ளதால், இங்கு தேவையான கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரியில் பட்டு நூற்பாலை அமைக்கும் திட்டம் ஆய்வு நிலையில் உள்ளது. தர்மபுரியில், பட்டு சார்ந்த புதிய தொழில்கள் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் பட்டுக்கூடு சார்ந்த வேலைகள் வாய்ப்புகள் அதிகரிக்கும். தற்போது செயல்பட்டு வரும் பட்டுக்கூடு ஏல அங்காடியில், 75 தொட்டிகள் அமைக்கப்பட்டு, பட்டுக்கூடுகள் ஏலம் நடக்கிறது. தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள பட்டுக்கூடு அங்காடி பயன்பாட்டிற்க வரும்போது 225 தொட்டிகள் அமைத்து பட்டுக்கூடுகளை ஏலம் விட முடியும். இதனால் தர்மபுரிக்கு பட்டுக்கூடுகள் வரத்து மேலும் அதிகரிக்கும். இதன் மூலம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் ெதரிவித்தனர்.


