பாப்பாரப்பட்டி, ஜூலை 3: பாப்பாரப்பட்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி மகன் பலியான சோகத்தில் இருந்த தந்தை, தனது 2 வயது மகளுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மோட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மனைவி காயத்ரி. இவர்களுக்கு நான்கரை வயதில் நந்திவர்மன் என்ற மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன், காயத்ரியின் தந்தை ராமானுஜம், தனது வயலில் டிராக்டரில் ஏர் உழுது கொண்டிருந்தார்.
அப்போது, சிறுவன் நந்திவர்மன், தாத்தாவுடன் டிராக்டரில் ஏறி உட்கார்ந்து கொண்டான். உழுது கொண்டிருந்த போது, திடீரென டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்த சிறுவன் மீது, ரோட்டாவேட்டர் சக்கரம் ஏறியதில் படுகாயமடைந்தான். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ராமானுஜம் மற்றும் உறவினர்கள் உடனடியாக சிறுவனை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் சிறுவன் இறந்து விட்டான். இதனிடையே, மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்த நாகராஜன், தனது 2 வயது மகளுடன் நேற்று வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும், அவர்களை காணவிவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த காயத்ரி, இதுகுறித்து இண்டூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான நாகராஜன் மற்றும் மகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
