நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்: கிடப்பில் போடப்பட்ட மொரப்பூர்-தர்மபுரி புதிய ரயில் பாதை இணைப்பு திட்டம்அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தர்மபுரி, ஜூலை 3: தர்மபுரி மாவட்டத்தில், மொரப்பூர்-தர்மபுரி புதிய அகல ரயில் பாதை இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், மொரப்பூர்-தர்மபுரி புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு நிலமெடுக்கும் பணி தீவிரமாக நடந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. புதியதாக வந்த மாவட்ட கலெக்டர் சரவணன், மொரப்பூர் - தர்மபுரி புதிய ரயில் பாதை அமைக்க ஆர்வம் காட்டி வருகிறார். பட்டாதாரர்களிடம் ரயில்வே திட்டப்பணிக்கு நிலம் கேட்டு பெறப்பட்டது. இன்னும் தர்மபுரி அருகே நிலம் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த சிச்கலுக்கு தீர்வு கண்டால் மட்டுமே, அடுத்த கட்ட நகர்வுக்கு இத்திட்டம் நடைபெறும்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக மொரப்பூர் - தர்மபுரி ரயில்வே இணைப்பு பாதைக்கான பணிகள் கிடப்பில் உள்ளது. ஒன்றிய அரசு கொடுத்த நிதி போதிய அளவில் செலவு செய்யப்படாமல் உள்ளது. ரயில்வே திட்டப் பணிகளை அரசு விரைவுப்படுத்த வேண்டும்’ என்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மொரப்பூர் - தர்மபுரி புதிய அகல ரயில் பாதை திட்டத்தின் கீழ், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் தர்மபுரி ஆகிய 3 வட்டங்களில் 18 கிராமங்களில் பட்டா நிலங்கள் 194 ஏக்கரை நிலஎடுப்பு செய்யவும், அரசு புறம்போக்கு நிலங்கள் 33 ஏக்கரை நிலமாற்றம் செய்யவும் அரசின் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.
மொத்த பட்டா நிலங்கள் 194 ஏக்கரில், 134 ஏக்கர் நிலங்களுக்கு தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலமெடுப்பு சட்டம் 1997-ன்படி, நிலஎடுப்பு சட்டப்பிரிவு 3(2)ன் கீழான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, நிலமெடுப்பு சட்டபிரிவு 3(1)-ன் கீழான அறிவிக்கையும் 134 ஏக்கர் நிலங்களுக்கு பிரசுரமாகியுள்ளது. மீதமுள்ள பட்டா நிலங்கள் 60 ஏக்கர், (மூக்கனூர், செட்டிக்கரை, அளே தர்மபுரி, ஏ.ரெட்டிஅள்ளி) நிலங்கள் 4 கிராமங்களின் பொதுமக்களின் நலன் கருதி, மாற்றுப்பாதை அமைக்க திருத்திய நில திட்ட அட்டவணை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரசு புறம்போக்கில் 33 ஏக்கர் நிலங்களில் 18 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் 15 ஏக்கரை, மாற்றுப்பாதையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, தர்மபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். மொரப்பூர் - தர்மபுரி ரயில்வே பாதை இணைப்பு திட்டத்திற்கு, மொத்தம் 194 ஏக்கரில் 134 ஏக்கர் நிலம் எடுக்கப்படுகிறது. இதில் 4,322 பட்டாதாரர்கள் உள்ளனர். இதில் 1,686 பட்டாதாரர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் இழப்பீடு தொகை வழங்க நிதி ரூ.33 கோடியே 54 லட்சத்து 26 ஆயிரத்து 856 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.17 கோடியே 3 லட்சத்து 52 ஆயிரத்து 935 நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. நிலம் எடுக்கும் பணி விரைவுபடுத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
