தர்மபுரி, ஜூலை 2: தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் உழவர் சந்தைகள், வாரச்சந்தை, தினசரி சந்தை மற்றும் மார்க்கெட் மண்டிகளுக்கு, கிராமப்புறங்களில் இருந்து அதிகப்படியாக காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. நடப்பாண்டு போதிய மழையில்லாததால் காய்கறிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தவிர, வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு காய்கறிகளை அதிக அளவில் வியாபாரிகள் வாங்கிச்செல்வதால், உள்மாவட்டத்தில் காய்கறிகள் விற்பனைக்கு வருவது குறைந்துள்ளது.
உழவர் சந்தைகளுக்கு பச்சை பட்டாணி, கேரட், முட்டைகோஸ், காலிபிளவர், பெரிய வெ ங்காயம், பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் ஓசூர் மார்க்கெட்டில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் வரத்து அதிகமாக இருந்ததால் தர்மபுரி உழவர் சந்தை, வாரச்சந்தைகளில் பச்சை பட்டாணி கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து பச்சை பட்டாணி வரத்து குறைந்ததால், விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று தர்மபுரி உழவர் சந்தையில் பச்சைபட்டாணி கிலோ ரூ.240க்கு விற்பனையானது.


