தர்மபுரி, ஜூலை 2: தர்மபுரி மாவட்டத்தில் ஏரியில் ஆக்கிரமிப்பை தடுக்க, கம்பி வேலி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், தர்மபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ராமக்காள் ஏரி, சுமார் 270 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியை ஒட்டி, பழைய தர்மபுரி, சவுளுப்பட்டி, கீழ்மாட்டுக்கானூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்தவர்கள், ராமக்காள் ஏரியின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்து வணிக நிறுவனங்கள், வீடுகள் கட்டியுள்ளனர். இதனால், ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டு வருகிறது. ஏரியை நம்பி பாசனம் செய்யும் பழைய தர்மபுரி, செட்டிக்கரை பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதை தடுக்க ராமக்காள் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புக்களை முழுமையாக அகற்றி, ஏரியின் எல்லைகளை வரையறை செய்து, கம்பி வேலிகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி ராமக்காள் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வணிக நிறுவனங்களை இடித்து அகற்றி உள்ளோம். ஆக்கிரமிப்பாளர்களுக்கு விரைவில் மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்தப்பட்ட பின்னர், ஏரியின் எல்லை வரையறுக்கப்படும். ஏரி ஆக்கிரமிப்பை தடுக்க, ஏரி எல்லைகளில் கம்பி வேலி அமைப்பதுடன், ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புக்களை கண்டறிந்து முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’ என்றனர்.
