Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

துணைப்பதிவாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் பொதுமக்களுக்கு விரைந்து சேவைகள் வழங்க முடியும்: அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

சென்னை,: கூட்டுறவுத் துறையில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மண்டல கூடுதல் பதிவாளர்கள், இணைப் பதிவாளர்கள் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு 300 துணைப் பதிவாளர் பணியிடங்கள் பணிநிலைத் திறனின்படி அனுமதிக்கப்பட்டுள்ளது. இப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் (டிஎன்பிஎஸ்சி) நிரப்பப்பட வேண்டியவை. இவை குரூப் 1ன் கீழ் வகைப்படுத்தப்பட்டவையாகும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கூட்டுறவுச் சங்கங்களை நிர்வகிக்கும் பணிகளான சரகத் துணைப் பதிவாளர்கள், கூட்டுறவுத் துறை வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், வணிக நோக்கம் கொண்ட கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர்களாக பணிபுரிவார்கள். இவர்கள் கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்தல், கூட்டுறவுச் சங்கங்களின் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் அதன் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வர்.

இப் பணியிடங்களில் காலியாக இருந்த 13 துணைப்பதிவாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு 13 பணியிடங்கள் கூட்டுறவுத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட 13 தேர்வாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கரங்களால் நேற்று பணிநியமன ஆணையை பெற்றுக் கொண்டனர். பின்னர், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசியதாவது: கூட்டுறவுத்துறை ஏழை, எளிய மற்றும் விவசாய பெருங்குடி மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. துணைப்பதிவாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதன் மூலம், பொது மக்களுக்கு விரைந்த சேவைகள் வழங்க ஏதுவாக அமையும். கலைஞரின் கூற்றுப்படி, தனி முயற்சியை விட கூட்டுறவு முயற்சியே சிறந்த பலனளிக்கும். எனவே, அனைவரும் கூட்டுறவின் சிறப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வின் போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் கே.கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர்.ந.சுப்பையன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) ஜெ.விஜயராணி ஆகியோர் உடனிருந்தனர்.