தஞ்சை அருகே பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு உணவக கொட்டகை இடித்து அகற்றம்
தஞ்சாவூர், ஜூலை 13: தஞ்சை அருகே பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட உணவக கொட்டகையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் மன்னார்குடி பிரிவு சாலையில் பாசன வாய்க்கால் உள்ளது. கல்லணைக்கால்வாயில் இருந்து இந்த வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடி பிரிவு சாலையில் ஏராளமான ஏக்கர் பாசனம் பெற்று வந்தன .
நாளடைவில் இந்த பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் செல்வது தடைபட்டது. இதனால் விவசாயிகள் மாற்று வழி மூலம் பாசனம் பெற்று வந்தனர். மேலும் இந்த ஆக்கிரமிப்பை அகற்றி பாசனத்துக்கு தண்ணீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை தஞ்சை கோட்ட பொறியாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தஞ்சை உட்கோட்ட உதவி பொறியாளர் கீதா மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பாசன வாய்க்கால் மீது தனியார் உணவகம் நடத்தி வருபவர்கள் ஆக்கிரமித்து தகர கொட்டகை அமைத்து இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் பொக்லின் எந்திரம் உதவியுடன் கொட்டகையை அகற்றி பாசன வாய்க்கால் மீது போடப்பட்டு இருந்த தரைதளத்தையும் இடித்து அகற்றினர். இதன் மூலம் பாசன வாய்க்காலில் சாகுபடிக்கு தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.