Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் மின்திருட்டில் ஈடுபட்ட 24 பேருக்கு ரூ.29 லட்சம் அபராதம்

விழுப்புரம், பிப். 28: விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட 24 பேருக்கு ரூ.29 லட்சம் அபராதம் விதித்து மின்வாரிய பறக்கும்படை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மின் திருட்டை தடுக்கும் வகையில் அந்தத் துறையில் செயல்படும் சிறப்பு அமலாக்க மற்றும் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு மின் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் திருச்சி அமலாக்க கோட்ட அதிகாரிகள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் அடங்கிய மின்வாரிய பறக்கும் படையினர் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென்று கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 24 இடங்களில் மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு 29 லட்சத்து 16 ஆயிரத்து 26 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கை தவிர்க்க முன் வந்து அதற்குரிய சமரச தொகை ரூ.2.49 லட்சம் செலுத்தியதால் அவர்கள் மீது காவல்துறையில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. மேலும் மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.