பண்ருட்டி, செப். 26: பண்ருட்டி அருகே நடுக்குப்பத்தை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன்(46). என்எல்சி ஒப்பந்த தொழிலாளி. இவர் நேற்று மனைவி நிர்மலா, இளைய மகள் நித்யா ஆகியோருடன் வீட்டை பூட்டி விட்டு திருவந்திபுரம் கோயிலுக்கு சென்றுள்ளார். மீண்டும் மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்து பின்பக்க கதவை பார்த்த போது கதவை உடைந்து கிடந்தது.
மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டின் உள்ளே சாமி படத்திற்கு பின்னால் இருந்த பீரோ மற்றும் பெட்ரூமில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த நகைகளை திருடி சென்றது தெரிந்தது. இதில் தாலி சரடு 3 பவுன், தோடு ஜிமிக்கி 1 பவுன், இலையுடன் கூடிய தோடு அரை பவுன், மாட்டல் ஒன்றரை பவுன், மோதிரம் 1 பவுன், 1 கிராம் மோதிரம், முத்து வளையல் அரை பவுன் என மொத்தம் 8 பவுன் 1 கிராம் தங்க நகைகள் மற்றும் கால் கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயுள்ளது.
இதன் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


