கடலூர், செப். 25: கடலூர் மாநகராட்சி ஆணையருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையராக கிஷன்குமார் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆணையரை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, அவரது கணவர் மாநகர திமுக செயலாளர் ராஜா மற்றும் கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் சந்தித்தனர்.
அப்போது ஆணையருக்கும், மேயர், மாநகர திமுக செயலாளர் ராஜா மற்றும் திமுக நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடந்த நிலையில் போலீசாருக்கும், திமுகவினருக்கும் கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கடலூர் மாநகராட்சி ஆணையர் அறை முன் துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


