பண்ருட்டி, செப். 25: நெய்வேலி வட்டம் 30, புது மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் மகன் சரவணகுமார் (39). இவர் தற்போது ஈரோடு மாவட்டம் சித்தோடு குமிளம்பரப்பு சாணார்பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2010ம் ஆண்டு பண்ருட்டி பகுதியில் மின்வாரிய டிரான்ஸ்பார்மர்களில் காப்பர் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனை தொடர்ந்து நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. கடலூர் எஸ்பி மற்றும் பண்ருட்டி டிஎஸ்பி உத்தரவின்பேரில், தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான போலீசார் நீதிமன்ற பிடிவாரண்ட்டை நிறைவேற்றும் பொருட்டு, திருப்பூர் கணபதிபாளையம் பகுதியில் தலைமறைவாக இருந்த சரவணகுமாரை கைது செய்து, புதுப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர் மீது பண்ருட்டி, நெல்லிக்குப்பம், முத்தாண்டிகுப்பம் காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


