குடிநீர் வழங்க கோரி மறியல்
சின்னசேலம், அக். 24: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது க.அலம்பளம் கிராமம். இந்த கிராமத்தில் 9வது வார்டு பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தில் பைப் லைன் புதைத்தும் இன்னும் குடிநீர் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்றுகாலை திடீரென்று சாலைமறியல் செய்தனர். இதனால் அங்கு சுமார் ஒருமணி நேரத்திற்குமேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கச்சிராயபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வெங்கட்ரமணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வந்து பார்வையிட்டு விரைவில் செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.