தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 77 கிலோ பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கடலூர், அக். 24: கடலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் நகர்நல அலுவலர், துப்புரவு ஆய்வாளர்கள் தலைமையில் நேற்று கடலூர் செம்மண்டலம். சாவடி பகுதியில் உள்ள மளிகை, காய்கறி கடை, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்த 77 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இனி பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடைகளின் உரிமையாளர்களை எச்சரித்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.