பண்ருட்டி, செப். 23: கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நடுமேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் சசிகலா(37). இவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயினை மர்ம நபர் பறித்து சென்றார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் காட்டாண்டிக்குப்பம் மேற்கு தெருவை சேர்ந்த சபாபதி(44) என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் கேரளா கண்ணூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகிறார்.
கடந்த 21.6.2026ல் சிறையில் இருந்து பரோலில் வந்தபோது இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு, தலைமறைவாகி மீண்டும் கேரளா கண்ணூர் சிறைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மீண்டும் கேரளா கண்ணூர் சிறையில் இருந்து பரோலில் வந்த சபாபதியை காடாம்புலியூர் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் சசிகலாவிடம் செயின் பறித்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


