விருத்தாசலம், ஆக. 21: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கிளிமங்கலம், குறுக்கத்தஞ்சேரி, மோசட்டை, டி.வி.புத்தூர், நந்தப்பாடி, வெண்கரும்பூர், மாளிகைக்கோட்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் விவசாயிகள் குறுவை நெல் அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வந்த நிலையில், லாரிகள் வராததால் சுமார் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்து மழையில் நனைந்து சேதமடையும் சூழல் உருவானது.
இது குறித்து விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கிளிமங்கலம், குறுக்கத்தஞ்சேரி, பெண்ணாடாம் உள்ளிட்ட கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடந்த நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றும் பணி நேற்று நடைபெற்றது. இந்நிலையில், குறுக்கத்தஞ்சேரி கொள்முதல் நிலையத்திலிருந்து 800 நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கிராமப்புறச் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் லாரியில் இருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் வயலில் சரிந்து விழுந்தன. இதில் உயிர் சேதம் இன்றி தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகள், சரிந்த நெல் மூட்டைகளை பாதுகாப்பாக மீட்டு மீண்டும் அடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



