Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி கறவை மாடுகளுடன் பேரணி சாலையில் பாலை ஊற்றி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஆக. 21: பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.60ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கறவை மாடுகளுடன் நேற்று பேரணி நடத்தி, பாலை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுவை அண்ணா சிலை அருகில் இருந்து கறவை மாடுகளுடன் தொடங்கிய பேரணி, சட்டசபை அருகே சென்றடைந்தது.

அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி பாலை சாலையில் ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்துக்கு புதுவை மாநில பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். பத்மநாபன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மாநில பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் கண்டன உரையாற்றினார்.  புதுச்சேரியில் கடந்த 2022ம் ஆண்டு பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது.

அதன்பிறகு 4 ஆண்டுகளுக்கும் மேலாக கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. கால்நடை தீவன பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, பால் கொள்முதல் விலையை லிட்டர் ரூ.60 ஆக உயர்த்த வேண்டும். லிட்டருக்கு ரூ.5 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை ஆண்டுதோறும் உயர்த்துவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

பாண்லே நிறுவனத்துக்கு தேர்தல் நடத்த வேண்டும். கடந்த ஆண்டு பாண்லே நிறுவனத்துக்கு அரசு ரூ.20 கோடி நிதியுதவி வழங்கியுள்ள நிலையில், மேலும் ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.