Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நெய்வேலியில் பரபரப்பு: உடலில் ரத்தம் கசிந்த நிலையில் பெண் யோகா பயிற்சியாளர் மர்ம சாவு

நெய்வேலி, ஆக. 20: நெய்வேலி வடக்குத்து ஊராட்சி தில்லை நகர் விஐபி தெருவில் வசித்து வருபவர் ஜெசிந்தா ரோசலி (56). இவர் பிரபல யோகா பயிற்சியாளர். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ஜெசிந்தா ரோசலி கடந்த ஒன்றை ஆண்டுகளாக நடராஜன் என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். கடந்த 3 நாள் நாட்களாக ஜெசிந்தா ரோசலியின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும் வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அருகில் உள்ள பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் இதுகுறித்து நெய்வேலி நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த நெய்வேலி காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் ஜெசிந்தா ரோசலி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். மேலும் அவரது உடலில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது. பின்னர் போலீசார் ஜெசிந்தா ரோசலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நெய்வேல நகர காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களும் சேகரிக்கப்பட்டது. உயிரிழந்த ஜெசிந்தா ரோசலி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் யோகா பயிற்சியாளர் உடலில் ரத்தம் கசிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.