திருக்கோவிலூர் அருகே மின்கடத்தி அலுமினிய கம்பி உற்பத்தி தனியார் கம்பெனியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
திருக்கோவிலூர், ஆக.20: திருக்கோவிலூர் அருகே கண்டக்டர் என சொல்லப்படும் மின்கடத்தி அலுமினிய கம்பி உற்பத்தி செய்யும் தனியார் கம்பெனியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூன் 25ம் தேதி தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.2.47 லட்சம் கோடி கடன் உள்ளது குறித்தும், மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.
அப்போது அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் கண்டக்டர் (மின்கடத்தி அலுமினிய கம்பி) கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாகவும், மேற்கொண்டு அது சம்பந்தமாக முழுமையாக விசாரணை செய்து அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சித்தாத்தூர் பம்பக்கரை பகுதியில் உள்ள சென்னையை தலைமையிடமாக கொண்ட ரோஹிந்த் கண்டக்டர் பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் கம்பெனியில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த விசாரணையில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தேவராஜ் மகன் சிவக்குமார் (52) என்பவர் இந்த கம்பெனியை ஆரம்பித்து நடைபெற்று வந்ததாகவும், இந்த கம்பெனியில் மின்சார வாரியத்தில் பயன்படுத்தப்படும் மின்கம்பிகள் சிங்கிள் அலுமினிய கம்பி ஒயராக வரவழைக்கப்பட்டு அதை மூன்று அல்லது ஆறு உள்ள அலுமினிய ஒயராக மாற்றி திரும்ப விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கம்பெனியில் கடந்த பத்து வருடங்களாக வெளி மாநில தொழிலாளர்கள் வந்து இந்த பணியை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது நான்கு மாதங்களாக கம்பெனி முற்றிலும் செயல்படாத நிலையில் இருந்து வந்துள்ளபோதும் அங்கு சிங்கிள் அலுமினிய கம்பி ஒயர்கள் ஆங்காங்கே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கம்பெனியில் கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டதில் ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தனியார் கம்பெனியின் உரிமையாளர் இங்கு இல்லாத நிலையிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



