கடலூர், ஆக. 20: பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் தூய்மை பரப்புரையாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒப்பந்த பணியாளர்களாக 26 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக ஒப்பந்த பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாகவும், அதற்கு லஞ்சம் கேட்பதாகவும் அலுவலக வளாகத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை மாநகராட்சி அலுவலகம் முன்பு பணிபுரிந்து வந்த பெண் ஒப்பந்த பணியாளர்கள் திடீரென அலுவலக நுழைவுவாயில் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகவும், கொரோனா காலத்திலும் ஒவ்வொரு வீடாக சென்று பணிபுரிந்து வந்தோம்.
ஆரம்ப காலகட்டத்தில் எங்களுக்கு ரூ.4000 சம்பளம் வழங்கி வந்த நிலையில், தற்போது ரூ.23,800 சம்பளம் வழங்கப்பட்டது. இந்நிலையில் திடீரென எங்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது ஒப்பந்ததாரர்கள் மாறிவிட்டனர். அதனால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அந்த ஒப்பந்ததாரரிடம் நாங்களும் பெண்கள் என தெரிவித்து எங்கள் பணியை தொடர விடாமல் திட்டமிட்டு, எங்களை பணியில் இருந்து நீக்கியதாக தெரியவந்தது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களை மீண்டும் பணியில் அமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இவர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகி குளோப் போராட்டம் செய்யும் இடத்தில் நேரில் வந்து கண்டன கோஷம் எழுப்பினார். தகவல் அறிந்த புதுநகர் இன்ஸ்பெக்டர் இளவரசி, முதுநகர் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பெண் பணியாளர்களில் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து, அந்த பெண் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். தொடர்ந்து அந்த பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து அங்கு வந்த மாநகர திமுக செயலாளர் ராஜா, திமுக கவுன்சிலர்கள் பிரகாஷ், ஆராஅமுது, ஜெயசீலன், பிரசன்னா, சுபாஷினி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் தர்ஷனா, வினோத், பரணிமுருகன், பாமக கவுன்சிலர் சரவணன், தமிழக வாழ்வுரிமை கட்சி கவுன்சிலர் அருள்தாஸ் ஆகியோர் பெண் பணியாளர்களுக்கு ஆதரவு ெதரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த மாநகர மேயர் சுந்தரி ராஜா, பெண் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக ஆணையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். பின்னர் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க போவதாக கூறிவிட்டு, அங்கிருந்து சென்றனர். இச்சம்பவம் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



