உள்நோக்கத்துடன் வேறுவிதமாக மாற்றியுள்ளார் காவல் அதிகாரி பாட்டிலை ஆய்வு செய்தால் கள்ளா? அல்லது மோரா? என தெரியும்
புதுச்சேரி, நவ. 15: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களில் ஆந்திர மாநிலத்தை ஒட்டி உள்ள ஏனாம் பிராந்தியமும் ஒன்று. இந்நிலையில் இங்குள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் 2 காவலர்கள் ஏனாமில் இருந்து வேன் மூலமாக புதுச்சேரி நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வந்துள்ளனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு விசாரணை முடிந்து, நேற்று முன்தினம் மாலை வேனில் ஏனாம் புறப்பட்டனர்.
இதற்கிடையே நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்ட வேனில் இன்ஸ்பெக்டர் ஆடலரசன் மற்றும் போலீசார், வாகனத்தில் சினிமா பாடல் போட்டுக் கொண்டு கள் குடித்தபடி நடனமாடி சென்றதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஏனாம் இன்ஸ்பெக்டர் ஆடலரசன் விளக்கம் அளித்து பரபரப்பு வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் புதுச்சேரியில் நாங்கள் பணிகளை முடித்துவிட்டு ஏனாம் திரும்பி கொண்டிருந்தோம்.
எங்களுடன் 2 ஐயப்ப பக்தர்கள் 2 பாட்டிலில் மோர் வாங்கிக் கொண்டு வந்தனர். பின்னர் அனைவரும் மோர் குடித்துக் கொண்டு நடனமாடியதை வீடியோ எடுத்து குரூப்பில் பதிவு செய்தேன். குரூப்பில் இருந்த ஒரு காவல் அதிகாரி உள்நோக்கத்துடன் அந்த வீடியோவை வேறுவிதமாக மாற்றி சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.
அந்த நபரை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பாட்டிலில் மோர்தான் உள்ளது. இதனை ஆய்வு செய்தால் கள்ளா? அல்லது மோரா? என்பது தெரியும். என கூறியுள்ளார். தனது உயர் அதிகாரிக்கு எதிராக இன்ஸ்பெக்டர் வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் புதுச்சேரி காவல்துறையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.