வேலை வாங்கி தருவதாக ரூ.5.60 லட்சம் மோசடி
சின்னசேலம், நவ. 15: வேலை வாங்கி தருவதாக சகோதரர்களிடம் ரூ.5.60 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் பச்சையம்மன் கோயில் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜி(33). இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும் இவர் கடந்த 4.3.2015ல் கள்ளக்குறிச்சி அருகே வடக்கநந்தல் பகுதியை சேர்ந்த ஆனந்தன்(45) என்பவர் தலைமையில் கலப்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த வகையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2017ல் ஆனந்தன், ராஜியிடம் தனக்கு மேலிடத்தில் அரசியல் செல்வாக்கு உள்ளதாகவும், உனக்கும், உன் தம்பிக்கும் போலீஸ் வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி மூன்று தவணையாக ரூ.5.50 லட்சம் பணம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் வேலை பற்றி கேட்டபோது கண்டிப்பாக வாங்கி தருகிறேன் என்று கூறி உள்ளார். ஆனால் வேலை கிடைக்காததால் மீண்டும் ஆனந்தனிடம் வந்து கேட்டபோது காட்டுமன்னார்கோவிலில் உள்ள என் நண்பர் கருணாகரனிடம் பணம் கொடுத்துள்ளேன்.
அவரிடம் சென்று வாங்கி வரலாம் என்று கூறி மேலும் ரூ.10,000 பணம் வாங்கியதாக தெரிகிறது. அதன்பிறகும் வேலை கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த ராஜி, கடந்த 21.1.25ல் போன் மூலம் ஆனந்தனிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது ஆனந்தன் அவரை அசிங்கமாக திட்டி பணம் கொடுக்க முடியாது என்று கொலை மிரட்டல் செய்துள்ளார். இது குறித்து ராஜி கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் ஆனந்தன், கருணாகரன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து அதில் ஆனந்தனை கைது செய்தனர்.