ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா: விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
விருத்தாசலம், ஆக. 14: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் ஆயிரத்து 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை, பாலாம்பிகை, உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ளே விருத்தாம்பிகை அம்மனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று அதிகாலை நடந்தது. இதை முன்னிட்டு உற்சவருக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூர்த்தி அருள்பாலிக்க அலங்கரிக்கப்பட்ட தேர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேளதாளத்துடன் சன்னதி வீதி, தென்கோட்டை வீதி, மேலக்கோட்டை வீதி, வடக்கு கோட்டை வீதி உள்ளிட்ட நான்கு கோட்டை வீதிகளையும் சுற்றி வந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று ஸ்படிக பல்லக்கு நிகழ்ச்சியும், நாளை அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருமாங்கல்யதாரணம் என்ற ஆடிப்பூர திருக்கல்யாணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார், செயல் அலுவலர் சங்கரன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.



