விருத்தாசலம், ஆக. 14: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவருக்கும், கீணனூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (22) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், விக்னேஷ் அந்த இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவரது வீட்டிற்குச் சென்று அவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அந்த இளம் பெண் கர்ப்பமானார்.
தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை விக்னேஷிடம் தெரிவித்தபோது, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சென்றவர், அதன் பிறகு அந்த இளம் பெண்ணைத் தொடர்புகொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம் பெண், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், விக்னேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



