உளுந்தூர்பேட்டை, ஆக.13: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது காட்டுநெமிலி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சாலையின் ஓரமாக கார் ஒன்று நேற்று அதிகாலையில் இருந்து நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் காரின் அருகே சென்று பார்த்தபோது ஓட்டுநரின் இருக்கையில் ஒருவர் அமர்ந்த நிலையில் இருந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் காரின் கதவை திறந்து பார்த்தபோது ஓட்டுநரின் இருக்கையில் இருந்தவர் இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து காரின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜீஸ் நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (68) என்பதும், இவர் ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் காரில் எங்கே சென்றார், எப்படி உயிரிழந்தார், சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த காரில் சடலமாக கிடந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியரின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



