சமுதாய சீர்திருத்த சிந்தனைகளின்படி வாழ்ந்து காட்டியவர் மகாகவி பாரதி பல்கலை. விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
புதுச்சேரி, டிச. 10: சமுதாய சீர்திருத்த சிந்தனைகளின்படி வாழ்ந்து காட்டியவர் மகாகவி பாரதி என பல்கலை விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் கூறினார். புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழ் இலக்கியத்துறை மற்றும் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் மகாகவி பாரதியாரின் 144வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். துணைவேந்தர் பிரகாஷ் பாபு, வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் ரவி, புல முதல்வர் சுடலைமுத்து, ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் மற்றும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசும்போது, 1908 முதல் 1918 வரை, பாரதி வாழ்ந்த அந்த 10 ஆண்டு காலம் பாரதிக்கும் சரி, புதுச்சேரிக்கும் சரி ஒரு பொற்காலமாக இருந்தது. அந்த காலத்தில் தான் அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்தார். அவரை வரவேற்று, அவருக்கு தங்க இடம் தேடிக் கொடுத்து, உணவு சமைத்து கொடுத்து பாதுகாத்தவர்களில் பாரதி முக்கியமானவர். பாரதியின் தொடர்பால் பாரதிதாசனையும் தமிழ் உலகம் அறிந்தது. பாரதி, தன்னுடைய வாழ்நாளில், பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு போன்ற சிறந்த படைப்புகளை புதுச்சேரியில் இருந்து தான் எழுதினார். அப்படி பாரதியால் புதுச்சேரியும்- புதுச்சேரியால் பாரதியும் உலகப் புகழ் பெற்றனர்.
பாரதி வாழ்ந்தது வெறும் 39 ஆண்டுகள் தான். ஆனால் அவருடைய சமுதாய, ஆன்மீக சிந்தனையும், படைப்பும் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு அவரை ஒரு மகா கவியாக வாழ வைக்கும். பாரத சமுதாயம் வாழ்கவே என்று ஒன்றுபட்ட பாரதத்தை பாடியவர். நம்மை பிரித்து ஆள வேண்டும் என்று நினைத்த ஆங்கிலேயரின் சூழ்ச்சியை வந்தே மாதரம் பாடல் பாடி கலங்கடித்தவர். பாரதியாரைப் பற்றி எப்போதும் எனக்கு ஒரு பிரமிப்பு உண்டு. டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் நம்முடைய அரசியல் சாசனத்தில் எதையெல்லாம் அடிப்படை கொள்கைகளாக வைத்தார்களோ, அதற்கு முன்பே ஒரு தொலை நோக்குப் பார்வையில், தன்னுடைய பாட்டுகளில் வெளிப்படுத்தியவர் பாரதியார். பெண் விடுதலைக்கும் பாரதி ஒரு முன்னோடி. சமுதாய சீர்திருத்த சிந்தனைகளை தைரியமாக எடுத்து சொன்னவர் பாரதி. பாரதிக்கு மொத்தம் 16 மொழிகள் தெரியும். எத்தனை மொழிகளை தெரிந்து கொண்டாலும் தன்னுடைய தாய்மொழி தமிழையும், தமிழ் பண்பாட்டையும் நேசித்தவர் அவர். சுதந்திரம் அடைந்த 100வது ஆண்டில் 2047ல் இந்தியா ஒரு வளமான நாடாக இருக்க வேண்டும். அதற்காக, பாரதியின் ஒற்றுமை சிந்தனையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.


