போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளின் மதிப்பு ரூ.7 கோடி சிபிசிஐடி போலீசார் அதிர்ச்சி
புதுச்சேரி, டிச. 10: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம், வைரம், பிளாட்டின நகைகளை மதிப்பீடு செய்ததில் 92 பவுன் நகைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு குறைந்தபட்சம் ரூ.7 கோடி என்பதை அறிந்து சிபிசிஐடி போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். புதுச்சேரியில் பிரபல மருந்து நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயாரித்து விற்கப்படுவதாக வந்த புகாரின்பேரில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, போலி மருந்துகளை மொத்தமாக விற்ற சீர்காழியை சேர்ந்த ரானா, காரைக்குடி மெய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் வசித்த மதுரையை சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன் என்பவர் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை, குருமாம்பேட், திருபுவனை உள்ளிட்ட இடங்களில் போலி மருந்து தொழிற்சாலை நடத்தி, செட்டி தெருவில் உள்ள மொத்த விற்பனை அலுவலகம் மற்றும் தவளக்குப்பம், இடையார்பாளையத்தில் குடோன் மூலம் சப்ளை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, மேற்கூறிய இடங்களில் சிபிசிஐடி போலீசார் மற்றும் மருந்து தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் சோதனை நடத்தி, பலகோடி மதிப்பிலான போலி மருந்துகளையும், அதனை தயாரிக்கும் இயந்திரங்கள், மூலப்பொருட்களையும் கைப்பற்றி சீல் வைத்தனர்.
தொடர்ந்து, கடந்த 6ம் தேதி சிபிசிஐடி போலீசார் ரெட்டியார்பாளையம் ஜெயாநகரில் உள்ள ராஜா (எ) வள்ளியப்பனின் வீட்டில் சோதனை நடத்தி, ஒரிஜினல், நகல் பத்திரங்கள், மருந்து இன்வாய்ஸ் ரசீதுகள், ஆவணங்கள், விலை உயர்ந்த செல்போன், கம்ப்யூட்டர் சாதனங்கள், ஹார்டு டிஸ்க், டைரி, பாஸ்போர்ட், பல கோடி மதிப்புள்ள தங்க, வைர, பிளாட்டின நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ள 10 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியது.
இதனிடையே, தலைமறைவாக உள்ள ராஜா (எ) வள்ளியப்பன் குறித்து நடத்திய விசாரணையில், அவரது சொந்த ஊர் திருப்பத்தூர் என்பதும், 15 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்து, தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததும், பின்னர் மருந்து மொத்த வியாபாரம் தொழிலை கடந்த 10 ஆண்டுகளாக போலி மருந்து தயாரித்து விற்றதும், அதில் சம்பாதித்த பணத்தில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகப் பகுதிகளிலும் பல சொத்துகளை வாங்கி குவித்துள்ளதும் தெரியவந்தது. டைரியில் 15 சொகுசு கார்கள் விவரங்கள் மற்றும் ஏராளமான செல்போன் நம்பர்கள் அதில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் அரசியல் புள்ளிகள் மற்றும் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் வள்ளியப்பனின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர, பிளாட்டின நகைகளை நேற்று மதிப்பிட்டு கணக்கீடு செய்யும் பணி நடந்தது. நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 92 பவுன் நகைகள் இருப்பது கணக்கீடு செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு குறைந்தபட்சம் ரூ.7 கோடி இருக்கும் என தெரிகிறது.
முன்ஜாமீன் ரத்து கோரி ஐகோர்ட்டில் இன்று மனு
போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் ராஜா (எ) வள்ளியப்பன் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்காக புதுச்சேரி கோர்ட்டில் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்று, தலைமறைவாகி விட்டார். அதன்பிறகே, அவரது வீட்டில் கோர்ட் அனுமதி பெற்று போலீசார் சோதனை நடத்தி ரூ.பல கோடி நகை, பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதனை ஆதாரமாக கொண்டு, வள்ளியப்பனின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர்.


