புதுச்சேரியின் நிர்வாகம் குறித்து தெரியாது விஜய் பேசியதில் 90 சதவீதம் உண்மை இல்லை அமைச்சர் நமச்சிவாயம் கடும் விமர்சனம்
புதுச்சேரி, டிச. 10: புதுச்சேரி மக்கள் சந்திப்பு கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் பேசியதில் 90 சதவீதம் உண்மை இல்லையென புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுவையில் விஜயின் பேச்சுக்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், விஜய்யை பொருத்தவரை புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதை தெரியாமல் பேசியுள்ளார். அவருக்கு சொல்லி கொடுத்தவர்கள் சரியாக சொல்லிக் கொடுக்கவில்லை. தவறான கருத்துக்களை விஜய் மக்களிடத்தில் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் அவரால் பேச முடியவில்லை, பேசவும் அவருக்கு வாய்ப்பில்லை. அதனால் புதுச்சேரி மாநிலத்தில் எதையாவது பேச வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
அவர் பேசியது கூட 12 நிமிடங்களுக்குள்தான். அவர் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. எதையாவது பேசியாக வேண்டும், ஏதேனும் குறைசொல்ல வேண்டும் என்பதற்காக சில குறைகளை பேசிவிட்டு சென்றுள்ளார். அவர் பேசியதில் 90 சதவீதம் எதுவும் உண்மை இல்லை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ரேஷன் கடைகளில் அரிசி போடாமல் இருந்தது. அரிசிக்கு பதிலாக பணமாக மக்களுக்கு போடப்பட்டு வந்தது. தேர்தலின்போது மக்கள் பணமாக வேண்டாம், அரிசியாக போடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் தேர்தலுக்கு பிறகு நேரடி பணப்பரிமாற்றத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று சொல்லி ஒன்றிய அரசின் ஒப்புதலோடு இன்றைக்கு இலவச அரிசி திட்டம் ஒவ்வொரு மாதமும் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இது தெரியாமல் விஜய் பேசியிருக்கிறார்.
தமிழகத்தில் விஜய் கூட்டம் நடத்தவே விடவில்லை. அவரை அனுமதிக்கவும் இல்லை. கரூர் சம்பவத்துக்கு பிறகு அவரால் எங்கும் கூட்டம் நடத்தமுடியவில்லை. காஞ்சிபுரத்தில் கூட உள் அரங்கில் 2 ஆயிரம் பேரை கொண்டு ஒரு கூட்டம் நடத்தினார். தேர்தல் என்று வரும்போது நிறைய கூட்டணி பேசுவார்கள். எந்த நேரத்தில் யாருடன் எந்த கட்சி செல்லும் என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் தான் தெரியவரும். இன்று எதைவேண்டுமானலும், யார் வேண்டுமானால் அனுமானமாக பேசலாம். ஆனால் தேர்தல் நேரத்தில்தான் உறுதியாக தெரியவரும்.
புதுச்சேரியை பொருத்தவரை இங்குள்ள மக்கள் அரசியலை நன்கு அறிந்தவர்கள். இந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள் திட்டங்கள் குறைவின்றி நடைபெறும் என்பது புதுச்சேரி மக்களுக்கு நன்றாக தெரியும். அதனால் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று சொல்வது வழக்கம். அந்த அடிப்படையில் விஜய்யும் சொல்லிவிட்டு சென்றுள்ளார். 2026ம் புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அவரது கூட்டணிக்கு என்ஆர்காங்கிரஸ் கட்சியை கொண்டு வருவதற்கு ஒரு சிறு முயற்சியை எடுத்து, அக்கட்சியின் மீது சாப்ட் கார்னரை காட்டலாம் என்று விஜய் நினைத்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


