Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூரில் வெயில் புதிய உச்சம் 105.3 டிகிரி கொளுத்தியது

புதுச்சேரி, ஜூன் 8: புதுச்சேரியில் தொடர்ந்து வெயில் வறுத்தெடுத்து வருகிறது. தொடர்ந்து 6வது நாளாக சதம் அடித்தது. நேற்று 100.76 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது. கடலூரில் நடப்பாண்டின் அதிகபட்சமாக 105.3 டிகிரி வெயில் சுட்டெரித்தது. கடந்த மே 4ம் தேதி துவங்கிய கத்திரி வெயில் 28ம் தேதியுடன் நிறைவடைந்தது. கடந்த மே மாதத்தில் 9 முறை வெயில் சதம் அடித்தது. இதில் அதிகபட்சமாக 26ம் தேதி 102.4 டிகிரி பதிவானது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரிக்கு பிறகும் வெயிலின் தாக்கம் புதுச்சேரியில் குறையவில்லை. கடந்த 2ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்களாக வெயில் சதம் அடித்து வருகிறது. 2ம் தேதி 102.4 டிகிரி, 3ம் தேதி 100.8 டிகிரி, 4ம் தேதி 101.8 டிகிரி, 5ம் தேதி புதிய உச்சமாக 104 டிகிரி, நேற்று முன்தினம் (6ம் தேதி) 102.7 டிகிரி பதிவானது. தொடர்ந்து, நேற்று 100.76 டிகிரி பதிவாகி இருந்தது.

நடப்பு கோடை சீசனில் நேற்றுடன் 14வது முறையாக வெயில் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சுட்டெரிக்கும் வெயிலுடன் அனல் காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர். பெண்கள் முகத்தை துணியால் மூடியும், குடை பிடித்தும் சென்றனர். பகல் பொழுதில் கடற்கரை சாலை ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அதேநேரம், சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒயிட் டவுன் பகுதியே களைகட்டியது. அழகிய பலவண்ண கட்டிடங்கள் முன்பு நின்று விதவிதமாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல், கடலூரில் நேற்று அதிகபட்சமாக 105.3 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இது, நடப்பாண்டின் அதிகபட்ச வெயில் என்பது குறிப்பிடத்தக்கது.