Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உளுந்து பயிருக்கு உரிய விலை கொடுக்கவில்லை என கூறி விருத்தாசலத்தில் விவசாயிகள் சாலை மறியல் போலீசார் சமரச பேச்சுவார்த்தை

விருத்தாசலம், பிப். 5: விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து பயிருக்கு உரிய விலை கொடுக்கவில்லை என கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்திலேயே மிகப் பெரிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் விருத்தாசலத்தில் இயங்கி வருகிறது. இங்கு விருத்தாசலம், கம்மாபுரம், மங்கலம்பேட்டை, திட்டக்குடி, பெண்ணாடம், வேப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் விளைவிக்கும் நெல், மணிலா, உளுந்து, எள், கம்பு, சோளம் உள்ளிட்ட விளை பொருட்களை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது உளுந்து சீசன் தொடங்கியுள்ளதால் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த உளுந்து பயிர்களை விற்பனைக்காக கொண்டு வந்த நிலையில் நேற்று மாலை வரை காத்திருந்தும் விவசாயிகள் கொண்டு வந்த உளுந்து பயிருக்கு உரிய விலை கொடுக்கவில்லை.

மேலும் நேற்று முன்தினம் 9 ஆயிரத்துக்கு மேல் உளுந்து மூட்டை விலை போனது. ஆனால் நேற்று ரூ.6 ஆயிரம், 7 ஆயிரத்துக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் முப்பநத்தத்தை சேர்ந்த விவசாயி சங்கர் தலைமையில் திடீரென விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விருத்தாசலம்-கடலூர் சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு மற்றும் போலீசார், விவசாயிகளை சமாதானப்படுத்தி அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய விலை நிர்ணயிக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் இதனை ஏற்ற விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.