Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

உளுந்தூர்பேட்டை, மார்ச் 3: தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளையில் இருந்து 43 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தை தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்த சரவணன் (46) என்பவர் ஒட்டிச் சென்றார். இந்த பேருந்து நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் அருகே உள்ள காந்தி நகர் அருகே சென்றுகொண்டிருந்தபோது பிரேக் சிஸ்டத்தில் தீப்பிடித்தது தெரிந்து உடனடியாக பேருந்தை சாலை ஓரம் நிறுத்திய டிரைவர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் இறக்கி விட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் தீ பேருந்து முழுவதும் பரவி எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து ஓட்டுநர் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து திருநாவலூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதிகாலை நடைபெற்ற இந்த தீ விபத்து சம்பவத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.