கல்வராயன்மலை, அக். 2: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டம் மேல்பாச்சேரி கிராமத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் விளாம்பட்டி ஆற்றில் நேற்று திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றுநீர் பெருக்கெடுத்து ஓடி, அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேல்பாச்சேரி அருகே உள்ள விளாம்பட்டி பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்வதற்காக சாலையோரமாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழையால் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, மாற்றுப்பாதையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் மற்றும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
அத்தியாவசிய தேவைகளுக்காக செல்ல வேண்டிய பொதுமக்களும் வெள்ள நீரை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேம்பால பணிகள் மந்தமான நிலையில் நடைபெற்று வருவதால் மழைக்காலங்களில் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் போக்குவரத்து துண்டிக்கப்படுவதால் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, மேல்பாச்சேரியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களுக்கு நிரந்தரமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


