கடலூர், அக். 2: கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் திருமாவளவன் எம்பி கலந்து கொண்டு, பட்டங்களை வழங்க இருப்பதாக கல்லூரி நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி விழாவுக்கு வருகை தரும் திருமாவளவனை வரவேற்பதற்காக 500க்கும் மேற்பட்ட விசிக நிர்வாகிகள், தொண்டர்கள் கல்லூரி முன் குவிந்திருந்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கார் வந்ததும் விசிக தொண்டர்கள் அவரது காரை சூழ்ந்து கொண்டனர். பின்னர் வெளியே வந்த அவர், அங்கு திரண்டிருந்த தனது கட்சி தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். தொடர்ந்து திருமாவளவனின் கார் கல்லூரி வளாகத்துக்குள் சென்றது. அவருடன் விசிக தொண்டர்களுக்கும் உள்ளே செல்ல முயன்றனர்.
விழாவில் மாணவிகள், அவர்களின் பெற்றோர்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறி விசிக தொண்டர்களை உள்ளே விட மறுத்து செக்யூரிட்டிகள் கதவை மூடினர். வாயில் கதவை தள்ளிக் கொண்டு கல்லூரிக்குள் நுழைய முயற்சித்த போது போலீசாருக்கும், விசிகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு சில போலீசாரும் கீழே விழுந்தனர். இதனால் அங்கிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். கல்லூரி வளாகத்தில் இருந்த விசிகவினர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
அப்போதும் ஒரு சிலர் கல்லூரியின் மதில் மீது ஏறி உள்ளே நுழைந்ததால் பட்டமளிப்பு விழாவுக்கு வந்த பெற்றோர்களும், மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர். விழா முடிந்ததும் திருமாவளவனை பாதுகாப்பாக கல்லூரியின் முதல்வர் அறைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிறிது நேரத்துக்கு பின் திருமாவளவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். திருமாவளவன் வருகையால் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
