Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வடலூரில் பட்டப்பகலில் துணிகரம்; இன்ஜினியர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

வடலூர், அக். 2: பட்டப்பகலில் இன்ஜினியர் வீட்டின் கதவை உடைத்து, 50 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் இசைவேந்தன்(37). இவர் துபாயில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வினோதினி(37) மற்றும் இவர்களது மகன் ஆகியோர் வடலூரில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வினோதினி தனது மகன் மற்றும் பெற்றோருடன் ஒகேனக்கலுக்கு செல்ல திட்டமிட்டார்.

அதன்படி நேற்றுமுன்தினம் காலை 7 மணி அளவில் வீட்டை பூட்டிகொண்டு ஒகேனக்கலுக்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். சுற்றுலாவை முடித்துக்கொண்டு அன்ைறய தினம் இரவு 9.30 மணி அளவில் குடும்பத்தினர் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.6,000 ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து வடலூர் காவல் நிலையத்தில் வினோதினி புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பூட்டிய வீட்டை நோட்டமிட்டு பட்டப்பகலில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை பிடிக்க போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். வீட்டின் கதவை உடைத்து, 50 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.