கடலூர், டிச. 3: கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் கடலூர் தென்பெண்ணையாற்றில் பெரு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மதியம் சுமார் 2 மணிக்கு மேல் கடலூர்- புதுச்சேரி சாலையில், கங்கணாங்குப்பம் பகுதி முதல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த சாலை தற்போது மூடப்பட்டுள்ளது. மேலும் ஆல்பேட்டை சோதனை சாவடியில் பேரிகார்டுகள் அமைத்து பொதுமக்கள் அந்த வழியாக செல்லாமல் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடலூர் கஸ்டம்ஸ் சாலையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் கடலூரில் இருந்து புதுச்சேரி மற்றும் சென்னை செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


