பண்ருட்டி: பண்ருட்டி அருகே நடுசாத்திப்பட்டு, தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னப்பராஜ் மகன் ரினோ ஸ்டீபன்ராஜ். இவர் கடந்த 17ம் தேதியன்று சாத்திப்பட்டு ஸ்ட்ராங் கடை அருகே பானிபூரி சாப்பிட்டு கொண்டிருந்தபோது, தெற்கு சாத்திப்பட்டை சேர்ந்த செல்வவேல் என்பவருடன் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அன்று இரவு ரினோ ஸ்டீபன்ராஜ் வீட்டின் மீது செல்வவேலின் மகன்களான ஜீவாவும், மகேஷும் பெட்ரோல் குண்டு வீசி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இதையடுத்து போலீசார், ஜீவா (19) மற்றும் மகேஷ், ஆகாஷ், ராஜசேகர் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜீவாவின் குற்றச் செயல்பாடுகளை தடுக்கும் வகையிலும், தடுப்புக் காவலில் வைக்கவும் கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


