புதுச்சேரி, நவ. 3: புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அமைச்சர் மரியவில்சனின் சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அவரையும், அவரது மனைவியையும் தாக்கியதாக கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கை விசாரித்து வந்த மாஜிஸ்திரேட் சேரலாதன், மாகே மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவராக (ஜூடிசியல் மாஜிஸ்திரேட்) மாற்றப்பட்டார். இதனால், முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் இல்லாத சூழலில், இந்த வழக்கின் விசாரணை இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள முதலாவது குற்றவியல் நீதிமன்ற வழக்கை, வேறு நீதிமன்ற நீதிபதி விசாரிக்கக் கூடாது எனக் கூறி அமைச்சர் மரியவில்சன் தரப்பில் புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, தலைமை நீதிபதி ஆனந்த் விடுமுறையில் இருப்பதால், வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு, நீதிபதி (பொறுப்பு) சந்திரசேகர் முன்னிலையில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.


