திருக்கோவிலூர், நவ.3: திருக்கோவிலூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரையொருவர் கட்டையால் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (70). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனுத்தேரி (65) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கடந்த ஓராண்டாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கணேசன் நேற்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த அனுத்தேரி மற்றும் அவருடைய உறவினர்கள் கணேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் அனுத்தேரி மற்றும் கணேசன் ஆகிய இருதரப்பையும் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் கட்டையால் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்தவர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இருதரப்பினரும் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் அளித்த புகார்களின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, இரு தரப்பையும் சேர்ந்த 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த மோதல் தொடர்பாக ராஜேந்திரன், சக்திவேல் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


