Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குரூப்2, 2ஏ தேர்வு எழுத தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு; அரசு பேருந்தை சிறைபிடித்து தேர்வர்கள் மறியல் போராட்டம்; கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி:  குரூப்2, 2ஏ தேர்வு எழுத தாமதமாக வந்த தேர்வர்களுக்கு அனுமதி மறுத்ததால் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குரூப்2, 2ஏ தேர்வு மாவட்டம் முழுவதும் பல்வேறு தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 9 மணிக்குள் வருகை புரிய வேண்டும் என்றும், 9 மணிக்கு பிறகு வந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி ஏகேடி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற குரூப்2, 2 ஏ தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத காலதாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டு நுழைவு வாயில் கேட் மூடப்பட்டன. இதில் அரசு அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தை கடந்து 9.05 மணியளவில் தேர்வு மையத்திற்கு வந்த தேர்வர்கள் தேர்வு மைய அதிகாரிகளிடம் தேர்வு எழுத அனுமதிக்குமாறு வலியுறுத்தினர். ஆனால் தேர்வு மைய அதிகாரிகள் நுழைவு வாயில் கேட்டை திறக்க அனுமதிக்காததால் அதிகாரிகளிடம் தேர்வர்கள் மற்றும் தேர்வர்களின் பெற்றோர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வலியுறுத்தியும் அனுமதிக்கப்படாததால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் மற்றும் தேர்வர்களின் பெற்றோர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் அந்த தேர்வு மையத்திற்கு எதிரே கள்ளக்குறிச்சி - சென்னை செல்லும் சாலையில் அந்த வழியாக சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்கள் மற்றும் தேர்வர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். அரசு பேருந்தை சிறைபிடித்து தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.