பண்ருட்டி, அக். 30: பண்ருட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மனைவி பாத்திமா. இவர்களுக்கு கடந்த 19ம் தேதி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த பச்சிளம் குழந்தையை கடந்த 22ம் தேதி புதுவையை சேர்ந்த ரேணுகா தேவிக்கு முபாரக் கான், ஜாபர்கான் ஆகியோர் மூலம் ரூ.4.5 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்பாளர் சித்ராதேவி பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் குழந்தையை பெற்ற தாய் பாத்திமா, குழந்தையை வாங்கிய ரேணுகாதேவி, இதற்கு உடந்தையாக செயல்பட்ட முபாரக்கான் மற்றும் ஜாபர்கான் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். குழந்தையை விற்பனை செய்வதற்காக, ரேணுகாதேவியிடம் முபாரக் கான் மூலம் ரூ.4.5 லட்சம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜாபர் கான் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


