புதுச்சேரி, அக். 29: தமிழக அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு நவ. 4ம் தேதிக்கு ஒத்திவைத்து புதுவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அமைச்சர் மரிய வில்சன் மீது, கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி அவரது சகோதரர் மரிய குளோத் (45) அவரது மனைவி கெரோலின் (42) ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த மனு மீதான விசாரணை கடந்த செப்.9ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை. இதையடுத்து மரியவில்சன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வேறு வழக்கில் ஆஜராவதால் வேறு தேதிக்கு வழக்கை ஒத்திவைக்க கோரினர். இதையடுத்து வழக்கு அக்.21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி தனது சகோதரரை தாக்கிய வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி 28ம் தேதிக்கு (நேற்று) ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் வந்தது. இதில் அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த வழக்கை வருகிற நவ.4ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


