பண்ருட்டி, செப். 29: பண்ருட்டி அருகே ஏ.பி.குப்பம் பெருமாள் கோயிலில் மர்ம நிழல் ஒளியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் ஏ.பி.குப்பம் என்ற அழகு பெருமாள் குப்பம் ஏரி கரையில் மக்கள் புதிதாக கோணங்கி பெருமாள் சிலை பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்து வருகின்றனர். இங்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயிலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பரபரப்பு காட்சி ஒன்று பதிவாகியுள்ளது. அதாவது பெருமாள் சிலை மீது மனித உருவம் போன்ற நிழல் ஒன்று வந்து மறைவதுபோல் தெரிகிறது. இது அமானுஷ்யமா? அல்லது தெய்வீக நிகழ்வா? என பக்தர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
அந்த நிழல் தோன்றும் நேரத்தை தனியாக பிரித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அது எங்கிருந்து வருகிறது என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர். இந்த தகவல் கிராமத்தில் பரவியதை அடுத்து அழகு பெருமாள் குப்பம் பெருமாள் கோயிலுக்கு ஏராளமான கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

