வடலூர், ஆக. 29: வீட்டின் அருகில் மது அருந்தி தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட வாலிபரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி குட்டக்கரை தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார்(41). கூலி தொழிலாளியான இவரது வீட்டின் அருகே 26ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த அன்பரசன்(19), ரவிக்குமார்(24), பிரவீன்குமார்(20), மணிகண்டன்(21) மற்றும் 16 வயதுச் சிறுவன் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் மது அருந்திவிட்டுச் சத்தம்போட்டுள்ளது. இதனை விஜயகுமார் தட்டிக்கேட்டதால் இருதரப்பினருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மீண்டும் மதுபோதையில் வந்த அன்பரசன் மற்றும் அவரது நண்பர்கள், முன்விரோதம் காரணமாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விஜயகுமாரை எழுப்பி கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய விஜயகுமாரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து விஜயகுமாரின் தாய் கமலா அளித்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து அன்பரசன், ரவிக்குமார், பிரவீன்குமார், மணிகண்டன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.



