Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

என்னை கடித்தது இந்த பாம்பு தான் சார்; காட்டுமன்னார்கோவிலில் பாம்பை பிடித்த நடுரோட்டில் சென்ற நபரால் பரபரப்பு..!

காட்டுமன்னார்கோவில், அக். 28: காட்டுமன்னார்கோவில் அருகே பெரியகுளம் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கிற்குள் சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு புகுந்துள்ளது. பாம்பு புகுந்ததை கண்ட வாடிக்கையாளர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை வீரர்கள், அங்கு வந்து பாம்பை தேடினர். ஆனால், பாம்பு கிடைக்காததால் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதற்கிடையே, அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவர் பாம்பை பார்த்துள்ளார். அவர் பாம்பை பிடிக்க முயன்றபோது, அது அவரை கடித்ததில் கையில் ரத்தம் வந்தது. இருப்பினும், அதை பொருட்படுத்தாத அந்த நபர் ரத்தம் சொட்ட சொட்ட பாம்பை பிடித்துக்கொண்டு காட்டுமன்னார்கோவில் கடைவீதி வழியாக தீயணைப்பு நிலையத்துக்கு நடந்தே சென்றார். இதனை பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, தீயணைப்புத்துறையினர் அந்த நபரிடமிருந்து பாம்பை பாதுகாப்பாக பெற்று, ஆள் நடமாட்டம் இல்லாத பாதுகாப்பான பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, பாம்பை பிடித்துச் சென்றவர் குப்பங்குழி கீழத்தெருவை சேர்ந்த அழகாநந்தன் (55) என்பது தெரியவந்தது. மேலும், அவர் பிடித்தது விஷமற்ற சாரைப்பாம்பு எனக் கூறப்படுகிறது. பாம்பு கடித்த அழகாநந்தனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பாம்பு கடித்த நிலையிலும், அதை பிடித்துக்கொண்டு கடைவீதி வழியாக அவர் சென்ற சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.