திட்டக்குடி, செப். 28: கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள கல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. அப்பகுதி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு கோயில் பூசாரி கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் மீண்டும் நேற்று காலை கோயிலை திறக்க வந்துள்ளார். அப்போது கோயில் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஊர் முக்கியஸ்தர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அனைவரும் கோயிலுக்கு சென்று பார்த்த போது கோயிலில் வைத்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது.
இது குறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ராம்நத்தம் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

