Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பண்ருட்டி அருகே பரபரப்பு: கல்லூரி மாணவர் தூக்கில் மர்ம சாவு

பண்ருட்டி, ஆக. 28: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சீரங்குப்பம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவை யார் நடத்துவது என்பதில் கடந்த சில நாட்களாக ஊரில் உள்ள இரு தரப்பினர்களுக்கிடையே மோதல் இருந்து வந்தது. வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் இருதரப்பினர்களுக்கு இடையே சமரசம் ஏற்பட்டதால் நேற்று முன்தினம் கோயில் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் கடலுார் பெரியார் அரசு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் மூன்றாம் ஆண்டு படித்து வரும் சீரங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வீரப்பன் மகன் விஜயரங்கன்(20) என்பவர், நேற்று காலை வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

கோயில் திருவிழா தகராறு காரணமாக நேற்று முந்தினம் இரவு கோவில் திருவிழாவுக்கு சென்ற விஜயரங்கனை, அங்கு ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்து அவரது உடலை வீட்டிற்கு பின்புறம் இருந்த கூரை வீட்டில் தூக்கில் தொங்கவிட்டதாகவும், மாணவன் சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பண்ருட்டி டிஎஸ்பி ரகுபதி வந்து விசாரணையை முடுக்கி விட்டார்.இந்நிலையில் ஒரு தரப்பினர் பண்ருட்டி அரசு மருத்துவமனையை நேற்று காலை முற்றுகையிட்டனர்.

பண்ருட்டி, புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், உதயகுமார் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் அங்கிருந்து பண்ருட்டி தாலுகா அலுவலகத்திற்கு சென்ற விஜயரங்கன் உறவினர்கள், அங்கு தாசில்தார் சந்திரன் ஜீப்பில் இருந்து இறங்கி வந்தவுடன் அவரை முற்றுகையிட்டு, நீங்கள் அனுமதி வழங்கியதால் தான் விஜயரங்கன் இறந்தான். இதற்கு நீங்கள் தான் காரணம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பண்ருட்டி டிஎஸ்பி ரகுபதி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், உதயகுமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். கல்லூரி மாணவன் மர்மமான முறையில் பிணமாக தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.