Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காட்டுமன்னார்கோவிலில் 25 கிராம மக்கள் மின் தடையால் இரவு முழுவதும் அவதி

காட்டுமன்னார்கோவில், ஜூன் 25: காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் 110 கிலோவாட் டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்து ஏற்பட்ட மின் தடையால் 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இரவு முழுவதும் அவதியடைந்தனர்.  காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு மின்சாரம் விநியோகிக்கும் 110 கிலோவாட் டிரான்ஸ்பார்மர் உயர் மின்னழுத்தம் காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்ததால் திடீர் மின் தடை ஏற்பட்டது. இந்த மின் நிலையத்தில் இருந்து பிரிந்து செல்லும் டி.நெடுஞ்சேரி, வானமாதேவி, முட்டம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் மாற்றி கொடுக்கப்பட்டு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டன.

ஆனால் தீப்பிடித்து எரிந்த காட்டுமன்னா்கோவில் மின்சாரம் விநியோகம் செய்யும் டிரான்ஸ்பார்மர் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறினர். இதனால் காட்டுமன்னார்கோவில் நகர் கண்டமங்கலம், குறுங்குடி, திருமூலஸ்தானம், திருநாரையூர், எள்ளேரி, லால்பேட்டை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கோடை காலம் என்பதால் மின்சாரம் இல்லாமல் புழுக்கத்தால் தூங்காமல் தெருக்களிலும், மொட்ட மாடியிலும் மின்சாரத்துக்கு காத்துக்கிடந்தனர்.

மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு கவசங்களுடன் தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மரில் தீயை அணைத்தனர். பின்னர் மின் ஊழியர்கள் பழுதான மின் உபகரணங்களை அகற்றி சரி செய்து அதிகாலை 3 மணிக்கு மீண்டும் மின்சாரம் விநியோகம் செய்தனர். இதனால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் இரவு ஏற்பட்ட மின் தடையால் கிராம மக்கள்

அவதியடைந்தனர்.